கவிதை

புதன், 13 ஜூலை, 2011

கதைகளம்

1. இலக்கியம் :

மனித சமுதாயத்தின் அகத்தையும் - புறத்தையும் காட்டும் நிலைக்கண்ணாடி இலக்கியம். அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மனித வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது.

மனித சமுதாயம் இலக்கியக் கண்ணாடியின் வழியாகத் தன் உள்ளத்திற்கு மகிழ்வையும் - அழகையும் தேடிக் கொள்கின்றது.

2. சொல் - எழுத்து :

"சொல்தான் மனிதன்".....கருத்தின் ஒலிவடிவம் சொல். சொல்லின் வரிவடிவம் எழுத்து.

சொல்லை மக்கள் மனத்தில் பதித்து - அது வெளிப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளாலும், சீரிய சிந்தனைகளாலும் மக்கள் கூட்டத்தை இயக்கி வந்தவன் அன்று 'சொல்லேர் உழவன்' என்றழைக்கப்பட்டான்.

சொல்லை எழுத்தாக்கி - அந்த எழுத்தை ஆழத்தெரிந்தவனே "எழுத்தாளன்"

3. படைப்பாற்றல் :

படைப்பாற்றலின் ஆணிவேர் கற்பனை ஆற்றல். சிந்தனைக்கு அழகு தருவது கற்பனை. கற்பனை இல்லாவிட்டால் உலகில் மனிதன் எதையுமே சுவையுடன் அனுபவிக்க முடியாது.

சிறுகதை - நாவல் - நாடகம் - கவிதை... என எல்லாப் படைப்புக் கலைஞர்களிடமும் இயற்கையாக அமைந்துவிட்ட தனிச்சொத்து இந்த கற்பனை ஆற்றல்.

4. படைப்பாளி :

கற்பனை என்ற ஆவேச உணர்ச்சியிடம் அகப்பட்டுக் கொண்டு - அதைக் காகிதத்தில் பதிய வைக்கும் எழுத்தாளனின் முயற்சியில்...

கற்பனை என்ற கடவுளிடம் வரம் கேட்டுத் துடிக்கும் நேரத்தில்-
கற்பனை என்ற காதலியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில்-
கற்பனை என்ற கட்டுக்கடங்காத குழந்தையின் பிடிவாதத்துடன் ஆசிரியன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில்...

'புதிய உலகத்தையும் - புதிய புதிய மனிதர்களையும் படைப்பதற்காக' எழுத்தாளன் படும் இன்ப வேதனைகளை நாம் காணலாம்.

5. படைப்பாற்றலின் தகுதிகள் :

* வாழ்க்கை அனுபவம் (Experiece of Life)

* கூர்ந்து நோக்கும் ஆர்வம் (Keen Observation)

* கற்பனைத்திறன் (Creativity)

6. சிறுகதை :

தனிமனித வாழ்க்கை அல்லது சமுதாய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட போக்கை சிறிய அளவில் சுவையோடு பிரதிபலிப்பது 'சிறுகதை'.....இது

ஒரு கதாபாத்திரத்தின் இயல்பை கூறுவதாகவோ - வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சுவைபட எடுத்துரைப்பதாகவோ - வாழ்க்கையின் ஒரு சிக்கலை அழகாக அல்லது அழுத்தமாக தீர்த்துவைப்பதாகவோ இருக்கலாம்.

7. நாவல் இலக்கணம் :

வாழ்க்கை எழுத்தாளனுக்குத் தரும் அனுபவக் கலவையே நாவலுக்கான மூலப்பொருள்!

* பெரியதொரு கதைக்கரு (Plot)

* கதைக்கேற்ற பாத்திரங்கள் (Characters)

* இயக்கும் நிகழ்ச்சிகள் (Situations)

* நிகழ்வுக்கான சூழ்நிலைகள் (Locations)

* சூழ்நிலைகளுக்கும் - பாத்திரப் பண்புகளுக்கும் ஏற்ற உரையாடல்கள் (Suitable Dialogues).....

......இவை எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவகைப் படைப்பிலும் "ஓர் குறிக்கோள்" வேண்டும்.

நூலின் பெயர் : 'கதைக் கலை' (கட்டுரைகள்)
ஆசிரியர் : திரு. அகிலன்
வெளியீடு : தாகம் - விலை : ரூ.45/-